மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் கடல் வேந்தன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திரையுலகில் பாடல் ஆசிரியராக உள்ளார். இவர் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் தேனி மாவட்டம் குறித்த "கிளப்பு கிளப்பு" என்ற வரிகளுடன் எழுதிய பாடல், அந்தோணி தாஸ் குரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் இவர் நடிகர் விஜய்யின், அரசியல் வருகையை வரவேற்கும் விதமாக பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பாடலில், “நட்டு வச்ச கொடி பறக்க, கொட்டடிடா வெடிவெடிக்க” , “எட்டு வச்சா விண்ணுயிரும் வெற்றியும் தொடுவான்” என்னும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடல் குறித்து பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர்-க்கு பின் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. எதிர் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெற வேண்டும். அண்ணன் விஜய் தமிழக முதலமைச்சராக தமிழகத்தை அலங்கரிக்க வேண்டும். அதற்காக நான் இந்த பாடலை எழுதியுள்ளேன். இந்த பாடல் கொள்கை பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். இந்த பாடலை எப்படி அண்ணன் விஜயிடம் கொண்டு சேர்ப்பது என தெரியவில்லை. அதனால், நான் செய்திகள் மூலம் இந்த பாடலை அவரிடம் சேர்க்க விரும்புகிறேன்” என்றார்.
Be the first to comment